பொருளாதார நிபுணர், அபிவிருத்தி வங்கியாளர், சர்வதேச ஆலோசகரைப் போன்றே தொழில் முயற்சியாளர் ஒருவராக வெற்றிகரமாக தனியார் துறைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்கள் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். எதிர்க் கட்சியின் சிறந்த பேச்சாளராக விளங்கிய இவர் எதிர்க்கட்சயின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான பேச்சாளராகவும் நடவடிக்கை மேற்கொண்டார்.
பின்னர் 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிய அவர் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பொருளாதார மூலோபாயங்கள் தொடர்பான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை ஒருங்கமைத்து GSP+ வரிச் சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பிய யூனியனின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்கள் முன்னின்று நடவடிக்கை மேற்கொண்டார். அவர் 2017 ஜூன் மாதம் முதல் பிரதமர் அவர்கள் அமைச்சுப் பதவியை வகிக்கும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மிசுரி பல்கலைக்கழகத்தின் பொருளியல் சம்பந்தமான கலாநிதிப் பட்டதாரியான இவர் நிறுவனத்தின் நிறைவேற்று தரப் பயிற்சியையும் பெற்றுக் கொண்டவராவார். ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ள இவர் தொழில்நுட்பம் மற்றும் அபிவிருத்தி போன்ற துறைகளின் கீழ் சில சர்வதேச வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார். இவர் 2011 இல் ‘ஐசன்ஹவர்’ அங்கத்துவத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். திருமணமான இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.